சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

காணாமல் போன தேவதைகள



அவன் இளைஞன். வாலிப வயதின் வசீகர கனவுகளுக்குச் சொந்தக்காரன்.
"மீனம்மா..அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகம்..." எங்கேயாவது இந்தப்பாடல் கேட்டால் அவனுக்குள்ளும் பூ பூக்கும். "ஆசை" படத்தில் வரும் இப்பாடல். அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதையின் முகத்தை, அந்த படத்தின் ஒளியில் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அதெல்லாம் அவனுடைய கர்வக்காலத்தில். அவனைச் சுற்றி அலட்சியக் காற்று ஒன்று வீசியபடி இருக்கும்.

'நான் Non veg சாப்பிடுறதையே நிறுத்திட்டேன் கணேஷ்..'
'ஏன் அது ப்ராமிணா?'
'தெரியல.. பார்த்தா அந்த மாதிரிதான் தெரியுது'

ப்ராமிண் இல்லாத ஒரு பெண்ணுக்காக அவன் ப்ராமிணாக மாறினான். அங்கேயும் ஒரு நாள் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த தேவதையின் வீட்டு வாசலில் வாழைமரம் கட்டி வழியனுப்பி வைத்தார்கள். அவன் புதிய எதிரிகளை தேடிக்கொண்டான். கனவில் அந்த எதிரிகளை தேடித்தேடி வெட்டிக் கொன்றான்.

கனவுக்காலம் முடிந்து கல்லூரிக்காலம் வந்தது.
மீண்டும் அலையடிக்க ஆரம்பித்தது. நான்கு வருடங்களாக ஒரு பெண்ணின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்த கின்னஸ் சம்பவம் அப்போதுதான் நிகழ்ந்தது. இன்றைய இளைஞர்களுக்கெல்லாம் ஒரு பெண்ணின் சிநேகிதம் என்பது கவுரவ அடையாளம். அவனும் அப்படி ஒரு அடையாளத்தைதான் தேடினான். 'இன்னைக்கு computer centre-ல நானும் அதுவும் மட்டும்தான்... ப்ராஜக்ட்-ல ஏதோ doubt கேட்டுட்டு போச்சு... என்ன பேசுறதுன்னே தெரியல..." அந்த்ப் பெண்ணைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள ஆசைப்பட்டான். காலம் கடந்தது. படிப்பு முடிந்து வெளியேறுவதற்குள் அந்தப் பெண்ணும் காணாமல் போனது.


அதன்பின் நிறைய தேவதைகள். அவனில் சலனங்கள் ஏற்படுத்தி சப்தமின்றி போனார்கள்.. இப்போது கூட ஒரு தேவதை அவன் விரல் பிடித்து பேசுகிறது. இந்த தேவதையின் நட்பு ஆயுள் இன்னும் எத்தனை நாளைக்கோ?..

ஆனாலும் அவன் இளைஞன். வாலிப வயதின் வசீகர கனவுகளுக்குச் சொந்தக்காரன்.
காணாமல் போவதற்கு தேவதைகள் தேசமெங்கும் இருக்கிறார்கள்....

Labels: ,

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு