சிநேகிதம்

இந்த வலைப்பூவில் இடம்பெறப் போகும் படைப்புகள் அனைத்தும் எனது சிநேகிதனுடையவை. என் சினேகிதன் எனக்கு எழுதிய/எழுதும் கடிதங்கள், கவிதைகள் அனைத்தும் இங்கு வலையேற்றப்படும்.

கடவுளும் நண்பனும்

கடவுளும் நண்பனும்

பூர்ணச்சந்திரன் என்றொரு நண்பன். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேருமுட்டி ஸ்கூலில் என்னுடன் படித்தான். பின்பு ஆறு,ஏழு,எட்டு என்று தொடர்ந்து பின்பு காணாமல் போய்விட்டான். சாந்தப்பிள்ளை சந்து என்ற தெருவில்தான் அவன் வீடு. அந்தணப்பேட்டை ஆரம்பநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார் அவன் தந்தை. அவர்கள் வீட்டுக்கொல்லைப்புறத்தில் ஒரு பப்பாளி மரம் உண்டு.மரத்தை ஒட்டி ஒரு சுவர். அதில் ஒரு ஓட்டை, கால் வைத்து வசதியாக ஏற. அதில் ஏறி சுவர் மீது நின்றபடி பப்பாளி பழம் பறித்து விடலாம். தினம் பள்ளி விட்டதும் நேராக அவன் வீட்டிற்கு சென்று இதுதான் எனக்கு வேலை.

பூர்ணச்சந்திரனுக்கு லேசான திக்குவாய் உண்டு. வெகு சுமாரகத்தான் படிப்பான். மிகவும் வெள்ளையாக இருப்பான். பத்தாம் வகுப்பிற்கு பிறகு அவனை அதிகம் பார்க்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து ஒருநாள் அக்கரைகுளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் போது அவனை பார்க்க நேர்ந்தது. சென்னையில் வேலை பார்ப்பதாகவும் 2000 ரூபாய் சம்பளமென்றும் சொன்னான். இரண்டு வருடம் கழித்து நாகப்பட்டினத்திலேயே அவனை அடிக்கடி பார்க்க நேர்ந்தது. ஏதோ கான்டிராக்ட் ஒர்க் பார்ப்பதாக தெரிந்தது. அதிகம் பேச முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு மெடிக்கலுக்கு வந்தான். மாப்ளே (என்னை மாப்ளே என்றுதான் அழைப்பான்) சவுரியமா? என்றான். பால்பண்ணைச்சேரியில் மாமியார் வீட்டோடு தங்கியிருப்பதாகச் சொன்னான். மாமியார்..? அப்போ கல்யாணம்..? பெண் குழந்தை பிறந்து பத்து நாள் ஆகிறதாம். சந்தோசமாயிருந்தது. யாரோ ஒருவர் ஸ்கூட்டரில் இருந்து ஹாரன் அடித்தார். "வர்ரேண்டா மாப்ளே.." என்றபடி போய் விட்டான்.


நடராஜனும் அப்படித்தான். கொஞ்சம் குள்ளமாக இருப்பான். அவன் அப்பாவைப் போலவே இவனுக்கும் உடம்பெல்லாம் முடி. நன்றாக படிப்பான். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பில் என்னுடன் போட்டி போட்டான். மாறி மாறி ராங்க் எடுப்போம். ஆறாம் வகுப்பிற்கு சென்றபோது அவன் english மீடியம், மாடி. நான் தமிழ் என்பதால் கீழே. அப்படி ஒன்றும் அது பெரிய பிரிவாக இல்லை. ஒரே பள்ளி என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். ப்ளஸ் ஒன்னில் அவனும் நானும் ஒரே க்ரூப், மீண்டும் இணைந்த்தோம். எனக்கு வயது குறைந்தது போலிருந்தது. பின் எனக்கு நடந்த விபத்தில் பிரிய நேர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடம், என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. திடீரெனெ விஜயலெட்சுமி தியேட்டரில் பாப்கார்ன் தின்றபடி சிரித்து கண்ணாடி அணிந்த நடராஜன் நிறைய குடித்திருந்தான், நிறைய படித்திருந்தான். பொறையாறு காலேஜில் இங்கிலீஸ் லிட்ரேச்சர். இங்கிலீஸில்தான் பேசினான். தெளிவான ஆங்கிலம், லேசாக வலித்தது. அதன்பிறகு சில வருடம் கழித்து அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில் செல்ல நாகூர் பாலம் தாண்டி பஸ் ஏற அவனும் வந்து ஏறினான். உடல் ரீதியாக முதிர்ச்சி தெரிந்தது, மனதிலும். ரயில்வேயிலிருந்து அப்பா ரிட்டையர்டு ஆனதைச் சொன்னான். கல்யாணத்திற்கு காத்துக்கிடக்கும் தங்கை. சரியான வேலை கிடைக்காமல் நாகூர் பள்ளியில் 1000 ரூபாய் சம்பளத்திற்கு ஆங்கில ஆசிரியராக இருப்பதாகச் சொன்னான். சில உதாரணங்களை ஆங்கிலத்தில் என்னிடம் அழகாக விளக்கினான். தினமலர் புத்தகதில் என்னுடைய பரிசு சிறுகதையைப் படித்திருக்கிறான். நிறைய எழுதச்சொன்னான். நிறைய மாறியிருந்தான். காலம் எப்படியெல்லாம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடுகிறது.

என் மனைவியுடன் ஒருமுறை பூ வாங்க வெளிப்பாளையத்துக் கடையில் நின்றபோது அவனும் வந்து பூ வாங்கினான். என் மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தேன். "சொல்லவேயில்லை" என்று கோபித்துக் கொண்டவன், "மன்னிச்சுக்கடா.." என்றபடி தனக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றான். ஜனவரி 2003 பார்த்தபோது மனைவி 5 மாதம் என்றான். இந்நேரம் குழந்தை பிறந்திருக்கும். எப்போதும் புன்னகைத்தபடி துறுதுறுவென்ற பார்வையுடன் எங்கள் வீட்டிற்கு வந்து பாக்யா படிக்கும் நடராஜ் அப்பாவாகி விட்டான்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகால நட்பு என்றால் இவர்கள் இருவரும்தான் இருக்கிறார்கள், இப்போதும் கண்முன் நடமாடியபடி. 5 வயதில் ஒன்றாம் வகுப்பில் சென்று அமர்ந்த நாளெல்லாம் ஞாபகமில்லை. ஆனால் அங்கேதான் இவர்கள் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள்.

இடையில் வந்தவர்கள் நிறைய பேர். அதேபோல் ஈருடலும் ஓருயிர் என்றெல்லாம் காணப்பட்டவர்கள், ஒரே இரவில் காணாமல் போன கொடுமையும் உண்டு. ரீவைண்டிங் வேலை பார்த்த குணா அப்படித்தான். இருவருக்கும் எல்லா அலைவரிசையும் ஒத்துப்போனது. இன்பநாட்களில் மட்டுமல்ல, துன்பநாட்களிலும் கூடவே இருந்தேன். நீடாமங்கலம் கிராமத்திலிருந்து வந்து கிரிக்கெட் வெறியரான குணா இப்போது எங்கோ இருக்கிறார்... இப்படி ஒரே படகில், ஒரே திசையில் பயணிப்பவர்கள் புன்னகைத்துக் கொள்வது சுலபம். ஆனால் திசை வேறு, பயணத்துக்கான சூழலும் வேறு. இருந்தும் திருஞானத்துடன் எனக்கான ஒரு மெல்லிய நட்புக்கயிறு எங்கு சென்றாலும் இணைத்தபடி இருக்கிறது. 16 வயதுக்கு மேல் அறிமுகமானவன். ஒரே பெண்ணை இருவரும் விரும்பிய காதல் தேசத்துக்கதைகள் எல்லாம் கல்வெட்டில் இல்லை. ஆனால் கண்மூடித்தனமான நட்பு இருக்கிறது. அவன் என்ன சொன்னாலும்,என்ன செய்தாலும், ஆதரவாய் நீளும் அசட்டுத்தனமான நட்பு இருக்கிறது.


ஊரெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள் நண்பர்கள். படிக்கும்போது மட்டும் பழகியவர்களில் விஷேசமானவர்கள்.....

பல் டாக்டராக பட்டையைக் கிழப்பிக் கொண்டிருக்கும் முகுந்தன்.(எனக்குப் பல் வலி வந்தால், உன்னைத்தான் வந்து பார்ப்பதாக இருக்கிறேன் முகுந்தா..)

கிரிமினல் லாயராக கோலோச்சிக் கொண்டிருக்கும் பாலாஜி.(பத்தாம் வகுப்பில் பார்த்தது போலவே துளி சதை ஏறாமல் உடம்பை எப்படி maintain பண்ணுகிறாய், பாலாஜி)

பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் பூசாரி வெங்கடேஷ்.(ப்ளஸ் டூவில் என்னுடைய லேத் ப்ராஜக்டை நீதான் செய்தாய். அப்போது தெரியாது, என் பெயருக்கான அர்ச்சனையை நீதான் செய்யப் போகிறாய் என்று..)


வேதாத்திரி மகரிஷியின் வாழ்க வளமுடன் மன்றத்தில் பொறுப்பாளராக பணிபுரியும் பழனி. (அடலசன்ட் வயதின் அசிங்களுக்குப் பிறகு இப்படி ஒரு திருப்பத்தில் சந்திப்போமென்று எதிர்பார்க்கவில்லை பழனி..)

இன்னும் பதிந்து போனவர்கள் ஏராளம்..

எனக்கு மறுபிறவிகளில் நம்பிக்கை வரச்செய்த துரைராஜ். (இப்போது சென்னையில் இருக்கிறான். இன்னமும் என்னை 'வாங்க...போங்க..உட்காருங்க' என்று மரியாதையாய் அழைத்து நட்பிற்கான இடைவெளியை அட்டகாசமாய் மெயின்டைன் செய்கிறான்.)

ஒரு பஸ் பயணத்தில் என் அருகில் அமர்ந்தபடி, 'உங்களை எனக்கு சரியாகத் தெரியாது.. உங்க கவிதைகளைத் தெரியும்' என்று கை குலுக்கிய நிசார்..

எந்த நேரத்தில், எந்த இடத்திற்கு கூப்பிட்டாலும் கூடவே வந்து விடும் கார்த்தி ( நீ கொஞ்சம் உயராமாயிருந்தால் ஆக்டர் சூர்யா மாதிரியே இருப்பாய்... அப்படி மாற விடாமல் தடுக்கும் உன்னுடைய ஹேர்-ஸ்டலுக்கு நன்றி.)

பரபரப்பாய் வந்து, பரபரப்பாக புன்னகைத்து, பரபரப்பாக சினிமா பேசி, பரபரப்பாய் பறந்து போகும், மெடிக்கல் ரெப்ரெசென்டேட்டிவ் பிரபுதாஸ்..

எப்போது பார்த்தாலும் கோபித்துக்கொள்ளும் ராஜா,

எப்போது பார்த்தாலும் ஆச்சர்யம் ஏற்படுத்தும் "கட்ஸ் விஜய்",

குட்டி குட்டி செலவுகளுக்கு எல்லாம் எனக்கு அவ்வப்போது காசு கொடுக்கும் ரமேஷ் ("பணக்காரனாய் வேஷம் போட்டாலாவது, பணம் வருதா என்று பார்ப்போம்" என்றபடி வேஷம் போடும் பணக்காரன்)

நான்கு வார்த்தைகள் ஜாலியாய் பேசினால் ஐந்தாவது வார்த்தையே அட்வைஸ் ஆரம்பித்து விடும் தண்டபாணி..

எல்லாவற்றுக்கும் மேலாய் சென்னை வேளச்சேரியின் ஓரப்பகுதியில் ஒருவன் இருக்கிறான், வேலை தேடி சென்னை வந்திருந்த போது, அவன் குடியிருந்த சிறுகூட்டில் எனக்கும் இடம் ஒதுக்கியவன். என்னிடமிருந்து மூன்றடி இடைவெளியில் அவனும் அவன் மனைவியும் படுத்துக்கொண்ட நம்பிக்கையை இப்போது நினைத்தாலும் நெஞ்சு பகீரென்கிறது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும், என்ன செய்தாலும், தீராத செஞ்சோற்றுக்கடன் அல்லவா அது...


இப்படி வாழ்க்கை முழுவதும் நம்பிக்கை..நம்பிக்கை முழுவதும் நண்பர்கள் என எவர் தந்த வரத்தையோ சுமந்தபடி வாழ்ந்து வருகிறேன். எல்லாரிடமுன் பிரியமாய் கை குலுக்க முடிகிறது. நட்பைப் பற்றி உண்மையாய், உயர்வாய் பேசுகிறவர்களிடத்தில் கையெடுத்துக் கும்பிடவும் தோன்றுகிறது. நண்பர்களாயிருந்து தலை கோதுபவர்கள் கடவுள்கள் என்று சத்தியம் செய்யத்தோன்றுகிறது. எழுத்தாளர் சுஜாதா எங்கோ படித்ததாய் எழுதிய கவிதையுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன், நெஞ்சம் நெகிழ்ந்து..




வானில் ஓர் அம்பை எய்தேன்
பூமியில் எங்கு விழுந்ததோ
தெரியாது
கண்ணால் தொடர முடியாமல்
அத்தனை வேகமாய்ப் பறந்தது
வானில் ஒரு பாடலை
உச்சரித்தேன்
அது பூமியில் எங்கு விழுந்ததோ
தெரியாது
யாரிடம் அத்தனை வேகமான
நுட்பமான பார்வை உள்ளது
பறந்து போன கானத்தைத் தொடர?

பல நாட்களுக்குப் பின்
ஒரு காட்டில் என் அம்பைக்
கண்டேன் உடையாமல்..

அந்த கானத்தையும்
முதலிலிருந்து கடைசிவரை
மறுபடி கண்டேன்.
ஒரு நண்பனின் இதயத்தில்...

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு